search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட் கார்னர் நோட்டீஸ்"

    வங்கி மோசடி வழக்கில் தலைமறைவான மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. #RedCornerNotice #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.  இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.



    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சர்வதேச போலீசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற இண்டர்போல், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் இன்று தெரிவித்துள்ளார்.

    தன் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் சதியின் விளைவு என்று மெகுல் சோக்சி கூறியதாகவும், இந்தியாவில் சிறைச்சாலையில் உள்ள வசதிகள், தனது பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது தப்பி ஓடியவர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் சர்வதேச கைது வாரண்ட் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும். #RedCornerNotice #MehulChoksi

    வங்கிக் கடன் மோசடியில் சிக்கி தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சர்வதேச போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து அவரைத் தேடும் பணியை தொடங்கி உள்ளது. #NiravModi #PNBFraud #InterpolRedCornerNotice
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

    மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன்கள் அனுப்பி வருகின்றன. நிரவ் மோடியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம்  சிபிஐ தெரிவித்தது. அத்துடன், நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது.



    சி.பி.ஐ. அளித்த தகவல்களை உறுதி செய்து, அதன் அடிப்படையில் நிரவ் மோடியை பிடிக்க இண்டர்போல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவர்களின் நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. அந்த நோட்டீசில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் இருப்பிடம் தெரிந்தால் அவர்களை கைது செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் இண்டர்போல் கூறி உள்ளது.

    எனவே, இண்டர்போல் உறுப்பு நாடுகளில் எதாவது ஒரு நாட்டில் நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #PNBFraud #PNBScamCase #InterpolRedCornerNotice
    ×